கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபீயின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' அனுபவக் கட்டுரைகள் பற்றிய ஒரு பார்வை
நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்கள், எழில் கொஞ்சும் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகின்றார். அங்கு பல்கலைக்கழகமொன்றில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், வானொலி நாடகக் கலைஞர், ஊக்குவிப்புப் பேச்சாளர், சமூக சேவையாளர் எனப் பன்முகங்களைக்கொண்டவர்.
இவருடைய கவிதைகளில் கவிநயம் சொட்டும். சிறுகதைகளை இவர் எழுதும் போது கையாளும் மொழிநடை வாசகர்களைச் சுண்டி இழுக்கும். நாடகங்களை இவர் எழுதும் போது பயன்படுத்தும் மொழி நடை மிகவும் இரசனையாக அமைந்திருக்கும். இவர் எழுதும் கட்டுரைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? கட்டுரைகளை எழுதும் போது இவர், தனது அனுபவக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடு வாசகர்களுக்கு முன்வைக்கும் பாங்கு அலாதியானது. மொத்தத்தில் இவருடைய ஆக்கங்கள் யாவும் இலக்கிய வாசகர்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையவை.
அவுஸ்திரேலியாவின் வளர்பிறை பதிப்பகத்தின் மூலம் மரீனா இல்யாஸ் ஷாஃபியின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற மகுடத்தில் அமைந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூலானது 132 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.
தான் இதுவரை முகநூலில் எழுதி வந்த அனுபவக் கட்டுரைகள் பலவற்றில் தெரிவு செய்த 33 அனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து 'என்மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற இந்த நூலை வெளியிட்டுள்ள நூலாசிரியர், தனது பெற்றோர்களான மர்ஹூம் முகம்மது இல்யாஸ், மஸ்தூரா உம்மா மற்றும் தனது அன்புக் கணவர் அஷ்ஷேய்க் செய்யத் ஷாஃபீ ஆகியோருக்குத் தனது நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். சமர்ப்பணத்தை தொடர்ந்து நூலாசிரியர் எழுதியுள்ள 'மலைகளைக் குடைந்து தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றில்லை. அழகிய வார்த்தைகளுக்கும் அந்த சக்தி இருக்கின்றது' என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். யாக்கூப் அவர்கள் முன்வைத்துள்ள பின்வரும் கருத்து கவனிக்கத்தக்கது.
'அறிவுபூர்வமான கட்டுரைகள் தொடர்பு சாதனத் துறையில் அண்மைக் காலமாக பாரிய அளவில் தாக்கம் செலுத்தி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக எழுத்தாற்றல் என்பது நவீன உலகை வடிவமைக்கும் நிகழ்ச்சி நிரலில் முன்னிலை வகிக்கின்றது. கட்டுரைகளைப் பொருத்தவரையில் ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள் என்பவை ஊடகங்களுடன் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அந்த வரிசையில் நியூசிலாந்தில் இருந்து மரீனா இல்யாஸ் ஷாஃபி தனது வாழ்வின் அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி, ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் 'இன்பத்தமிழ் வானொலி'யில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் 'வளர்பிறை' நிகழ்ச்சியினூடாக காற்றலை வழியே கலை வடிவங்களாகப் படைத்திருப்பது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும். அதனையும் தாண்டி அவர் தனது கட்டுரைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நவீன ஊடகத் துறையில் இன்னும் ஒரு சாதனையாகவே நான் கருதுகின்றேன்'.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை, தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு, வலம்புரி கவிதை வட்டத்தின் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் அணிந்துரையும் நூலை அலங்கரிக்கின்றன. தான் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்து நூலாசிரியர் தனதுரையில், 'இங்கே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. இரத்தமும் சதையும் கலந்து எழுதப்பட்ட, உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த சம்பவங்கள். உடலும் உள்ளமும் சோர்ந்து, தளர்வடைந்து, இனி வாழ்ந்தது போதும் என்று அலுப்புத் தட்டும் போதெல்லாம் இந்த அனுபவங்களை மீட்டிப் பார்த்து ஒரு கோப்பைத் தேநீர் போல் ஊற்றிப் பருகி, என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இனி நூலாசிரியர் நூலின் உள்ளடக்கத்தில் முன் வைத்துள்ள விபத்து, பஸ் பயணம், மனித நேயம், பாதை தவறிய பயணம், சொர்க்கத்தின் சிறு துண்டு, நியாயத்தை தேடி, உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்?, மறுபக்கம், தவறிப்போன மரணம், ஒரு புன்னகையின் விலை, பூட்டப்படாத வீடுகள், வியாபாரிகள் அற்ற கடைகள், தூங்காத இரவுகள், ஒரு திகில் பல திருப்பங்கள், அதிசயத் தீவு, ஹிச் ஹைக்கிங் (ர்iஉh ர்மைiபெ), மாற்றங்கள், மூச்சுத் திணறிய புற்கள், துணை, மனச்சாட்சி, தற்கொலை முயற்சி, கொரோனா தொற்றாலி, எதிர்வீட்டு ஜன்னல், திருமணம், சட்டத்தில் ஓர் ஓட்டை, சீருடை மாற்றுவதற்குள், இரண்டு வருடங்களின் பின்பு, படிக்கற்கள், வீட்டைச் சுமந்து செல்லல், தூண்டில், வெள்ளம், கனவு நிறைவேறிய நாள், பாதியில் சிதறிய பயணம் ஆகிய 33 தலைப்புகளில் அமைந்துள்ள அனுபவக் கட்டுரைகளில் சிலவற்றை மாத்திரம் வாசகர்களின் இரசனைக்காக இங்கே எடுத்து நோக்குவோம்.
'விபத்து' (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த முதலாவது அனுபவக் கட்டுரையானது அவ்வப்போது சிறிய சிறிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் துவண்டு போகும் மனிதர்களுக்கு சிறந்த படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது. நூலாசிரியர் தனது பயணத்தில், தான் எதிர்கொண்ட விபத்தின் மூலம் சக்கர நாற்காலியில் காலம் கழித்த நாட்களை மிகுந்த துயரோடு நினைவுபடுத்தி, வல்ல நாயன் அல்லாஹ்வின் துணையோடு, அவர் எழுந்து நடந்த கதையைப் பதிவு செய்துள்ளார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது எனது மனமும் ஒரு நிமிடம் கலங்கித்தான் போனது. இந்தக் கட்டுரையின் மூலம் மன உறுதியுடன் கூடிய இறை நம்பிக்கையானது வாழ்க்கையின் எந்தத் துயரமான கட்டத்தையும் கடக்க வைக்கும் என்பதை மிகவும் அருமையாகச் சொல்லி நிற்கின்றார்.
கை, முதுகு, கழுத்து என்று உடல் முழுவதுமான காயங்களோடு கால் எலும்பு முறிந்து இரண்டு வருடங்களாக எழுந்திருக்க முடியாமல் சக்கர நாற்காலியே கதியென்றிருந்தவருக்கு மீண்டும் பழைய நிலைக்கு வர முடியுமா என்று தெரியாத சந்தர்ப்பத்திலும் இறைவனின் கருணையில் நம்பிக்கையை இழக்காத நிலையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து உடல்நிலை தேறி மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறி வந்த கதையை வாசிக்கும் போது உண்மையில் எனது மேனியும் புல்லரித்துப் போய்விட்டது. சோதனைகள் பலவற்றையும் ஈமானை பலப்படுத்தும் செயற்பாடாக பார்க்கும் நூலாசிரியரின் மனப்பாங்கு எமது ஈமானையும் அதிகரிப்பதாக அமைந்துவிடுகின்றது.
'பாதை தவறிய பயணம்' (பக்கம் 32) என்ற தலைப்பில் அமைந்த அனுபவக் கட்டுரையும் ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருவதாகவே அமைந்துள்ளது. நியூசிலாந்திலுள்ள மிக உயரமான 'மவுண்ட் குக்' என்ற மலையின் இடைக்கிடையே இருக்கும் குன்றுகளில் ஏறி அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அங்கிருக்கும் ஒரு குன்றுவரை பயணித்து, பனிப்பாறையைப் பார்க்கும் ஆசை நம் நூலாசிரியருக்கும் ஏற்படவே தனது கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பலருடன் பயணத்தை ஆரம்பித்த பொழுதொன்றில் பாதி தூரத்தைக் கடக்க முன்பே கூட வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் நூலாசிரியரின் உடல்நிலை சற்று இந்தப் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமைதான். நூலாசிரியருடன் வந்த நண்பர்கள் மெல்ல மெல்ல நடந்து செல்ல விரும்பவில்லை. அவர்கள் அவசரமாகச் சென்றே இயற்கைக் காட்சிகளை இரசிக்க விரும்பினார்கள்.
வேறு வழியில்லாத நிலையில் மிகவும் களைத்துப்போன நிலையில், தாங்க முடியாத முட்டுக்கால் வலியுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மனோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறையோனைப் பிரார்த்தித்து, மலை அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு கணவர் மற்றும் தெரிந்தவர்களின் துணையோடு நம் நூலூசிரியர் திரும்பிவிட்டார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது மனிதர்களை நம்பிப் பயனில்லை. ஆனால் இறை நம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும் என்ற ஒரு புதுத் தெம்பை விதைத்துச் செல்கின்றது.
இதுவரை மிகுந்த துயரத்தோடும், மேனி சிலிர்க்கின்ற வகையிலும், ஆச்சரியத்தோடும் கட்டுரைகளை வாசித்து வந்த எனக்கு 'உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்..?' (பக்கம் 43) என்ற கட்டுரைத் தலைப்பு ஒரு சுவாரஷ்யத் தன்மையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்விக்கு என்ன பதிலைத்தான் எழுதி இருப்பார் என்று யோசித்துக் கொண்டே கட்டுரையை வாசித்தேன். விரிவுரை மண்டபத்தில் மாணவர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியே இது. அதற்கு இவர், 'சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பலதார மனம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறதே தவிர அது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு செயல் அல்ல' என்று மிகவும் அழகாகப் பதில் சொல்லியுள்ளார்.
ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண், இன்னொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்ய நேரிட்டால் அந்த ஆணின் கடமைகள் என்ன என்பதையும், அந்தப் பெண்ணின் உரிமைகள் என்ன என்பதையும், முக்கியமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பு பற்றியும் தெளிவாக முன்வைத்து, ஒரு முஸ்லிம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு குழந்தையும் 'தனக்கு தந்தையின் பெயர் தெரியாது' என்று முறையிடக்கூடிய அவலம் நேர வாய்ப்பில்லை என்பதையும் தெளிவாக மாணவர்களிடம் விளக்கியுள்ளார்.
'தவறிப்போன மரணம்' (பக்கம் 50) என்ற திகில் கட்டுரையானது தலைப்புக்குள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுரைக்குள் வரும் ஒற்றைக் கதாநாயகியான அந்தப் பெண்ணுக்கு இறுதியில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி கட்டுரை மீதான முடிவு இன்னும் நீள வேண்டும் என்ற மனோ பாவத்தை ஏற்படுத்தி நிற்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
'வியாபாரிகள் அற்றக் கடைகள்' (பக்கம் 60) என்ற கட்டுரையை வாசிக்கும் போது ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற ஒரு உணர்வு தொற்றிக்கொள்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் கூட பொருட்களை திருடிச் செல்கின்ற ஒரு சூழலில் வசிக்கின்ற எமக்கு இந்தக் கட்டுரை புதுமையான விடயத்தைச் சொல்லி நிற்கின்றது. இப்படியும் சாத்தியமா என்று நினைக்கத் தோன்றுகின்றது. 'பொய்யும் ஏமாற்றமும் களவும் ஊறிப்போன ஒரு சமூகத்தில் வியாபாரிகள் அற்ற கடைகள் என்ற கோட்பாடு வெறும் கனவாகவே இருக்கும். ஆனால் மனச்சாட்சியை மதித்து வாழப் பழகிக்கொண்டால் இதுவும் சாத்தியமே' என்ற நூலாசிரியரின் வரிகள் அந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, தான் கண்ட யதார்த்தத்தை சிறப்பாக முன்வைத்துள்ளார்.
'அதிசயத் தீவு' (பக்கம் 71) என்ற கட்டுரை கடல் கடந்து ஒரு குட்டித் தீவைப் பார்க்கப் போன விடயத்தைப் பேசுகின்றது. மினி பஸ்ஸின் அளவுகூட இல்லாத, குட்டியாக ஒரு வேனில் பறப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒன்பது பேரை மட்டுமே சுமந்து செல்லக்கூடிய ஒரு சிறிய விமானத்தில் குட்டித் தீவைப் பார்க்கப் பயணித்த கதையை நூலாசிரியர் பயம், பதட்டம், உற்சாகம் கலந்து முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரை முழுவதையும் வாசித்த போது 'அண்டாட்டிக்கா'வுக்கு அருகில் உள்ள 'ஸ்டீவர்ட் ஐலண்ட்' என்ற அந்த அழகிய தீவைப் நாமும் பார்த்துவிட்டு வந்தது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது. எல்லாற்றையும்விட இந்தத் தீவில் திருடர்களே இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி தருகின்றது.
'வீட்டைச் சுமந்து செல்லல்' (பக்கம் 115) என்ற கட்டுரையானது மிகவும் ஆச்சரியமான ஒரு தகவலைக் கூறி நிற்கின்றது. அதாவது நியூசிலாந்தில் வீடுகள், ஹோட்டல்கள் போன்றவை இடமாற்றம் செய்யப்படுகின்றதாம். நியூசிலாந்தில் வீடுகள் எப்போதும் நிலத்திலிருந்து கொஞ்சம் உயரமாக இருக்குமாம். அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்புக் கருதியே இவ்வாறு பலகை வீடுகள் அமைக்கப்படுகின்றதாம். இப்படி நிலநடுக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் வீடுகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றுகிறார்களாம். நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் அமைந்துள்ள 40 விருந்தினர் அறைகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் கூட ஒரு தளத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறதாம். இதுபோன்ற தகவல்களை இந்தக் கட்டுரை எமக்கு எடுத்தியம்புகின்றது.
இலக்கிய இரசம் சொட்டும் இவருடைய எழுத்துக்கள், நிச்சயமாக வாசகர்களை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. பொதுவாக இவருடைய படைப்புகளை நோக்கும் போது அவை சமூகத்துக்குத் தேவையான, முக்கியமான கருத்துகளை முன்வைப்பதாகவே அமைந்துள்ளன. 'என் மேல் விழுந்த மழைத்துளிகள்' என்ற அனுபவக் கட்டுரைகளானது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்துள்ள இந்த நூலானது வாசகர்களான எமக்கு சிறந்த ஆலோசனைகளையும், நல்ல படிப்பினைகளையும் தருகின்றன என்பதைத் துணிந்து கூறலாம். எனவே இவருடைய இந்தக் கட்டுரைத் தொகுதி இலக்கிய வாசகர்கள் அனைவரையும் நிச்சயமாகக் கவரும். இருந்தாலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டியது தவிர்க்க முடியாதுள்ளது. நூல் வடிவமைப்பில் இன்னும் கூடிய கரிசனை காட்டியிருக்கலாம். அதிலும் குறிப்பாக பந்தி பிரித்தல் போன்ற முக்கியமான விடயத்தை நல்ல அவதானிப்புடனே செய்திருக்க வேண்டும். அடுத்த வெளியீடு இன்னும் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே இங்கு இதனைக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இறுதியாக தொடர்ந்தும் பல காத்திரமான இலக்கிய நூல்களை வாசகர்களுக்குத் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.
நூல் :- என்மேல் விழுந்த மழைத்துளிகள்
நூல் வகை :- அனுபவக் கட்டுரைகள்
நூலாசிரியர் :- மரீனா இல்யாஸ் ஷாஃபீ
வெளியீடு :- வளர்பிறை பதிப்பகம்
விலை :- 800 ரூபாய்
நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்